வரலாறு
திருச்சிராப்பள்ளி நகரம் -மலைக்கோட்டை நகரம்
தற்போது திருச்சிராப்பள்ளியின் ஒரு பகுதியாக இருக்கும் உறையூர் கி.மு.300 முதல் சோழர்களின் தலைநகரமாக விளங்கியது. பண்டைய இலக்கிய விவரங்கள் வழியாக கி.பி.300 முதல் கி.பி.575 வரையிலான களப்பிரர்கள் காலக்கட்டத்திலும் உறையூர் சோழர்கள் கட்டுப்பாட்டிலேயே இருந்தது என்பதை அறிய முடிகிறது. அதைப்பின்னிட்டு உறையூரும் தற்போதைய திருச்சிராப்பள்ளியும் அதை ஒட்டிய பகுதிகளும் கி.பி.590 ல் அரியணைக்கு வந்த முதலாம் மகேந்திரவர்ம பல்லவ மன்னரின் கட்டுப்பாட்டிற்கு வந்தது. கல்வெட்டுகளின் மூலம் இந்த பகுதி கி.பி.880 வரை பல்லவர்களின் கட்டுப்பாட்டிலோ பாண்டியர்களின் கட்டுப்பாட்டிலோ இருந்ததை அறிய முடிகிறது. கி.பி.888-ல் ஆதித்திய சோழ மன்னர் பல்லவர்களை வீழ்த்தினார். அப்போது முதல் திருச்சிராப்பள்ளியும் அதன் பிராந்தியமும் சோழர்களின் கட்டுப்பாட்டிற்குட்பட்ட பகுதியாக விளங்கியது. கி.பி.1225 ல் இந்த பகுதி போசளப் பேரரசு அல்லது ஹோய்சாளப் பேரரசு கட்டுப்பாட்டில் இருந்தது. அதன் பின்னர் முகாலாயர்களின் வருகை வரை பாண்டியர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது.
திருச்சிராப்பள்ளி சில காலம் முகாலய மன்னர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. பின்னர் விஜயநகர மன்னர்களால் அது முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. நாயக்கர்களாலும், விஜய நகர அரசர்களின் கவர்னர்களாலும் கி.பி.1736 வரை திருச்சிராப்பள்ளி நிர்வகிக்கப்பட்டது. திருச்சிராப்பள்ளி கோட்டையும் தெப்பக்குளமும் விஸ்வநாத நாயக்கரால் கட்டப்பட்டது. நாயக்கர்களின் ஆட்சி மீனாட்சி அரசியால் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
இந்தப் பகுதியை பிரெஞ்சு மற்றும் ஆங்கிலேய படைகளின் உதவியுடன் இஸ்லாமியர்கள் மீண்டும் ஆட்சி செய்தனர். சந்தா சாஹிப் மற்றும் முகமது அலி ஆங்கிலேயரால் திருச்சி ஆட்சி செய்யப்பட்டது. இறுதியில் ஆங்கிலேயர்கள் திருச்சிராப்பள்ளியையும் மற்ற பகுதிகளையும் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். அதன் பின்னர் கர்நாடப் போரில் காலத்தில் ஏற்பட்ட உடன் படிக்கையின் படி திருச்சிராப்பள்ளி கிழக்கிந்திய கம்பெனிக்கு விட்டு கொடுக்கப்பட்டது. ஆட்சியர் ஜான் (ஜுனியர்) வாலஸ் தலைமையின் கீழ் 1801 ல் திருச்சிராப்பள்ளி மாவட்டம் உருவாக்கப்பட்டது. அதன் பின்னர் இந்தியா சுதந்திரம் அடையும் வரை சுமார் 150 வருடங்கள் திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஆங்கிலேயரின் ஆதிகத்தில் இருந்தது.
கல்லணை
தென்னிந்தியாவில், தமிழ்நாட்டில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பழமையான அணையாகும். இது திருச்சிராப்பள்ளியிலிருந்து 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இது சோழ மன்னர் கரிகால சோழனால் 2-ம் நூற்றாண்டின் வாக்கில் கட்டப்பட்டது. இது உலகின் பழமையான நீர்நிலை பராமரிப்பு மற்றும் சீராக்கி திசைமாற்றும் கட்டுமானமாக அறியப்படுகிறது. இன்று வரை இது பயன்பாட்டிலுள்ளது. திராவிட பொறியியல் அறிவின் அடையாளமாகத் திகழ்கிறது.
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி
திருச்சிராப்பள்ளி 10.8050O N 76.6856OE என்ற புவியியல் ஆள்கூறுகளில் அமைந்துள்ளது. நகரத்தின் சராசரி உயரம் 88 மீட்டர்களில் (288 அடி) ஆகும். இது தமிழ்நாட்டின் புவியியல் மையத்திற்கு அண்மையில் அமைந்துள்ளது. இதன் தரைப்பகுதி பெரும்பாலும் தட்டையாக அமைந்துள்ளது. அங்கொன்றும் இங்கொன்றுமாக சிற்சில குன்றுகள் காணப்படுகிறது. இந்த குன்றுகளில் உயராமான குன்றாக மலைக்கோட்டை அமைந்துள்ளது.
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி சட்டம் 1994-ன் படி உருவாக்கப்பட்ட திருச்சிராப்பள்ளி மாநகராட்சி திருச்சிராப்பள்ளியை நிர்வகிக்கிறது. 2001 ஆம் வருட கணக்கீட்டின் படி நகரின் பரப்பு 146.9 சதுர கிலோமீட்டர் (56.7 சதுர மைல்) ஆகும். திருச்சிராப்பள்ளி சாலை, ரயில் மற்றும் வான்வழியாகவும் முற்றிலும் இணைக்கப்பட்ட ஒரு நகரமாகும். இங்கிருந்து தென்கிழக்கு ஆசியாவிற்கும் மத்திய தெற்கு பகுதிகளுக்கும் பயணிகள் விமானங்கள் இயக்கப்படுகின்றன.